ஓட்டு கேட்க சென்றபோது அமைச்சர் பழனியப்பனுக்கு கடும் எதிர்ப்பு : ரோட்டில் மரங்களை போட்டு தடுக்க முயற்சி
5/2/2025 3:41:10 PM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பழனியப்பன் ஓட்டு கேட்டு சென்றபோது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மீண்டும் ஓட்டு கேட்க வருவதா? என்று அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், அமைச்சர் பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தொகுதிக்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி ஊராட்சி நத்தமேடு கிராமத்திற்கு பிரசாரத்திற்காக சென்றார்.
அப்போது, வழக்கம்போல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த முறை வைத்த கோரிக்கைகளில் எதனையும் நிறைவேற்றாமல், மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வந்தீர்கள் என கேட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் பழனியப்பன் முயன்றார்.இதுதொடர்பாக ஊர் மக்களுக்கும், அமைச்சருடன் வந்த அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் நிலவியதோடு, திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பிரசார வேனில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உடனே, அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவரை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி காப்பாற்றினர். இதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டுச்சென்றனர்.அப்போது, வழிநெடுகிலும் கற்கள் மற்றும் மரங்களை போட்டு தடுப்பு ஏற்படுத்தியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அவற்றை அப்புறப்படுத்தியவாறு அங்கிருந்து சென்றனர்.
கல்வீச்சு சம்பவத்தில் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது. மேலும், உடன் சென்ற வாகனங்களும் சேதமடைந்தன.சம்பவம் குறித்த தகவலின் பேரில், பொம்மிடி போலீசார் நத்தமேடு கிராமத்திற்கு சென்று விசாரித்தனர். அமைச்சர் பழனியப்பன் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக அரூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி நேரடி விசாரணை நடத்தினார். இதையடுத்து, அந்த ஊரைச் சேர்ந்த 20 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.