நிலக்கரி இறக்குமதியில் அதிமுக அரசு ரூ.1500 கோடி ஊழல் இந்தோனேஷியா வங்கிகளில் அமைச்சர்கள் பல கோடி முதலீடு கருணாநிதி பரபரப்பு குற்றச்சாட்டு
5/2/2025 3:08:16 PM
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள்:
* ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவருடைய சொத்துக்கள் சில விடப்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?ஆமாம். குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் பழைய சபையர் திரையரங்கம் இருந்த காலி இடம் ஜெயலலிதா பெயரில் உள்ளதாகவும், ஆனால் ஜெயலலிதாவின் வேட்பு மனுவில் இதை குறிப்பிடவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை, அந்த இடம் கட்சிப் பெயரில் வாங்கப்பட்டிருந்தால், சொத்து வரி கட்சியின் பெயரில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இடத்திற்கான சொத்து வரியை ஜெயலலிதாதான் கட்டி வருகிறார். வேறு சில சொத்துக்களும் ஜெயலலிதாவின் வேட்பு மனுவிலே சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைத்திடக் கூடிய சாதுர்யமும், சக்தியும் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
* அதிமுக ஆட்சியின் ஊழல்களைப் பற்றி தமிழகமே விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுகவினர் “நேர்மையின் அவதாரங்கள்” என்பதைப் போல ஜெயலலிதாவும், ஒரு சில அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்களே?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதோ ஓர் உதாரணம். அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இந்தப் பணம் இந்தோனேசியா வங்கிகளில் குவித்துச் சேமிக்கப்படுகிறது என்றும் ஒரு தகவலை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 இலட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதில் 140 லட்சம் டன் நிலக்கரி உள்நாட்டு நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மூலம் பெறப்படுகிறது. மீதி சுமார் 60 லட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. அயல்நாடுகளில் நிலக்கரி விலை 2009ம் ஆண்டுகளில் டன் ஒன்று 130 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டில் இருந்து நிலக்கரி விலை வீழ்ச்சி கண்டு, 30 டாலர் முதல்40 டாலராக உள்ளது.
இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் சரக்கு கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால், ஒரு டன் நிலக்கரியின் இறக்குமதி விலை 50 டாலர்கள்தான். (இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 360 ரூபாய்). ஆனால் தமிழக மின்வாரியம், போலியான ஆவணங்கள் மூலம் இந்த நிலக்கரியை 87 டாலருக்கு வாங்குவதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது டன் ஒன்றுக்கு 3,360 ரூபாய் விலைக்கு வாங்கப்படும் நிலக்கரியை, 5,752 ரூபாய்க்கு வாங்குவதாக மோசடியான பொய்க் கணக்குக் காட்டப்படுகிறதாம். இந்தத் தகவல் ஆங்கில நாளேடு ஒன்றில் 9-4-2025 அன்று வெளியான பதிப்பில் இடம் பெற்றுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கப்பலில் வரும் போது, “இன்வாய்ஸ்” எல்லாம் திருத்தி மாற்றப்பட்டு, புது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 87 டாலராக பொய்க் கணக்கு பதிவு செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்டு கூடுதலாக வரும் தொகை அ.தி.மு.க. அமைச்சர்களுக்காக இந்தோனேஷியா வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நிறுவனமான வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக அந்த நாளேடு கூறியுள்ளது.தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் 60 லட்சம் டன் நிலக்கரியில் கணிசமான அளவு அதானி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை, தமிழக மின்வாரியமோ, மின்துறை அமைச்சரோ, முதல் அமைச்சரோ இதுவரை மறுக்கவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மனோஜ்குமார் கார்க் என்ற நபர் மும்பை நீதிமன்றத்தில் இந்த விபரங்களை வாக்குமூலமாகவே கொடுத்திருப்பதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.
பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?
*இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான தொகை கடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்களே? உண்மைதான். இந்தத் தேர்தலையொட்டி பணம் கடத்தப்படுவது மட்டுமல்ல, அதிகாரிகள் மாறுதல்களிலும் இதுவரை எந்தத் தேர்தலிலும் நடைபெறாத அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.சட்டம், ஒழுங்கு டிஜிபி அசோக் குமார், தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டிஜிபி., மகேந்திரன், தேர்தல் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.டி.ஜி.பி., கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, புதுக் கோட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், வேலூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி உட்பட 9 மாவட்டக் கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.எனினும், தமிழக போலீஸ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக முழுமையாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. அதில் குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் பற்றியும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., திரிபாதி பற்றியும் தொடர்ந்து, அவர்கள் ஆளுங்கட்சிக்கு எவ்வாறு துணையாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் செய்திகள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தான் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி., அசுதோஷ் சுக்லா சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அது போலவே சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி மாற்றப்பட்டு அந்தப் பதவியில் கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இதிலிருந்து ஆளும் அதிமுக எவ்வாறெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக அதிகாரிகளைப் பயன்படுத்திப் பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்பது புரிகிறதல்லவா?
*முதல்வர் ஜெயலலிதா அவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி விட்டதாகத் தொடர்ந்து பொய் பேசி வருகிறாரே?2011ம் ஆண்டு, அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த வாக்குறுதிகளையும், சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையும் அவர் நிறைவேற்றவில்லை என்று பல முறை நான் தெரிவித்து, அவை தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். ஜெயலலிதா இதுவரை குறிப்பான என்னுடைய கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. திசை திருப்பிடும் வகையில் ஏதேதோ பொய்களைச் சொல்லி ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார்.
வாக்குறுதி எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று ஆங்கில நாளேடு ஒன்று தலையங்கமே எழுதியிருக்கிறது. அதில், “ஜெயலலிதாவின் வாக்குறுதிகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. 2011ம் ஆண்டு தேர்தலின்போது அந்தக் கட்சியின் சார்பில் அளித்த தேர்தல் அறிக்கையில் 54 வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. உதாரணமாகச் சொல்ல வேண்டுமேயானால், 300 மெகாவாட் திறன் கொண்ட பத்து சோலார் மின்சார மையங்களை அமைக்கப் போவதாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.
அது வெறும் காகித வாக்குறுதியாகவே முடங்கிவிட்டது. மின்சாரத் திருட்டைத் தடுப்பதற்கு இராணுவத்திலிருந்து பதவி ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு வலிமை மிகுந்த ஒரு படையை அமைக்கப் போவதாகச் சொன்னார். முன்னாள் ராணுவ வீரர்கள் அதை ஆவலோடு எதிர்பார்த்தது தான் மிச்சம். வாக்குறுதி அளித்தபடி எந்தப் படையையும் ஜெயலலிதா அமைக்கவில்லை.மேலும் ஜெயலலிதா சட்டப் பேரவை விதி 110இன் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் 187 அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.
அந்த அறிவிப்புகளில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 196 கோடி ரூபாய் தேவை. அது குறித்து வெள்ளை அறிக்கை வைக்க வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்தும்கூட, அந்தக் கோரிக்கையை ஜெயலலிதா நிராகரித்து விட்டார். ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்கும் வரை, ஜெயலலிதாவையும் “டாஸ்மாக்” நிறுவனத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்றெல்லாம் ஜெயலலிதாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அதில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் எந்தக் கதியிலே இருக்கின்றன என்று தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதற்கும் நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அதை மறைக்கின்ற முயற்சியில் ஜெயலலிதா ஈடுபடுவது இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேட முயற்சிப்பது போன்றதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.