கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட ஜெ. ஆட்சியில் உற்பத்தி செய்யவில்லை புள்ளி விவரங்களுடன் ராமதாஸ் அறிக்கை
5/2/2025 3:07:29 PM
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 15,500 மெகாவாட். ஆனால் மொத்த மின் உற்பத்தி 14,500 மெகாவாட்டாக உள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 4,713 மெகாவாட் மட்டுமே. மத்தியத் தொகுப்பிலிருந்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்தும் 4,442 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 5,426 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. இதில் 498 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.15.14 என்ற அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
ஜெயலலிதா கூறுவதைப் போலவே ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தமிழகத்திற்கு இப்போது 7,485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அதில் 1,800 மெகாவாட் மின்சாரம் முந்தைய ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மேட்டூர் மற்றும் வடசென்னை மின்நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, தேசிய அனல் மின் கழகம் கூட்டு முயற்சியில் அமைத்த வல்லூர் மின்திட்டத்தின் 3 அலகுகளில் இருந்து 1,050 மெகாவாட், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இருந்து 563 மெகாவாட், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தூத்துக்குடியில் கூட்டு முயற்சியில் அமைத்த மின் நிலையத்திலிருந்து 439 மெகாவாட், 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்களில் இருந்து 98 மெகாவாட், நெய்வேலி மற்றும் மத்திய அரசின் திட்டங்களிலிருந்து தமிழகத்தின் பங்காக 470 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது.
இவை தவிர தனியாரிடமிருந்து 3,065 மெகாவாட் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகிறது. இதில் ஒரு மெகாவாட் கூட ஜெயலலிதா அரசால் திட்டம் தீட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட, மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படவில்லை.அவ்வாறு இருக்கும் போது 7,485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதை, அதிலும் 5,585 மெகாவாட் தனியாரிடமிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் கிடைக்கும் நிலையில் அதையெல்லாம் தமது அரசின் சாதனை என்று ஜெயலலிதா எப்படி கூற முடியும்? இப்படி சொல்வதற்கு நாக்கு கூச வேண்டாமா?.அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்திட்டமாவது தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.