ஓட்டு சேகரிக்க சென்ற நடிகர் கருணாசை ஊருக்குள் அனுமதிக்க மக்கள் மறுப்பு தொண்டி அருகே பரபரப்பு
5/2/2025 3:06:59 PM
தொண்டி: தொண்டி அருகே பிரசாரத்திற்கு சென்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் கருணாசை கிராமத்திற்குள் நுழைய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கருணாஸ் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு தொண்டி பேருராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் எங்கள் ஊருக்குள் அதிமுகவினர் யாரும் நுழையக்கூடாது எனக்கூறி தடுத்துள்ளனர். பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால் விரக்தியில் கருணாஸ் பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பி சென்றார்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த வருடம் நாங்கள் வழிபட்டு வந்த ஆதிபராசக்தி கோயிலை மரைன் போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக இடித்து தரைமட்டம் செய்தனர். கிராமத்தின் சார்பில் பல போராட்டம் நடத்தியும் பலனில்லை. அதிமுக நகர் செயலாளர் பவுசுல் ஹக், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து என அதிமுக தரப்பில் யாரும் இதுகுறித்து விசாரிக்க கூட எங்கள் ஊருக்கு வரவில்லை. ஆனால் ஓட்டு கேட்டு மட்டும் வருகின்றனர். இதனால் உள்ளே நுழையக்கூடாது என தடுத்தோம்’ என்றனர்.