அமைச்சர்கள் தொகுதிகளை கண்காணிக்க 42 தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராஜேஷ் லக்கானி பேட்டி
5/2/2025 3:06:14 PM
சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியது:தமிழக சட்டமன்ற தேர்தலில், 2 தொகுதிக்கு ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் என மொத்தம் 124 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடும் 42 தொகுதிகளை கண்காணிக்க, கூடுதலாக 42 தேர்தல் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்கள், இன்று தமிழகம் வருவார்கள். இது தவிர, 122 பொது பார்வையாளர்கள், 31 போலீஸ் பார்வையாளர்கள், 118 ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக வர உள்ளனர். அரசியல் பொதுக்கூட்டங்களில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வர தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அப்படி அழைத்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2011ம் ஆண்டு 58,761 வாக்குப்பதிவு மையங்கள் இருந்தது. இது வரும் தேர்தலில் 66,001 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை என இருந்த எண்ணிக்கை, 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பறக்கும் படைக்கு என தனி வாகனம் இன்று முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.பூத் சிலிப் பிரிண்ட் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் 3 நாட்களில் முடிவடைந்து விடும். 5ம் தேதி முதல் வீடு வீடாக தேர்தல் ஆணையம் சார்பில் பூத் சிலிப் வழங்கப்படும். 3ம் தேதி மாலை முதல் ஒவ்வொருவருக்கும் எஸ்எம்எஸ் மூலம், தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள், எந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்கா நாளை சென்னை வருகிறார். அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பார்வையாளர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.நடிகர்கள் வாக்களிக்க தனி வரிசை கிடையாது. ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.