அதிமுக வாகனத்தில் பல கோடி பணம் கடத்தல்? ஆர்டிஓ ஆபீசை திமுகவினர் முற்றுகை
5/2/2025 3:05:13 PM
தியாகதுருகம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடூர் சோதனைச்சாவடி அருகே நேற்றிரவு பறக்கும் படையை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், தலைமை காவலர்கள் செந்தில்குமார், மாரியம்மன், புகைப்படக்கலைஞர் ஆனந்தன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.இரவு 8.35 மணியளவில் அவ்வழியாக வந்த மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தியபோது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பதிக்கப்பட்ட நோட்டீஸ்கள், போஸ்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கவுள்ள பூத் சிலிப்புகள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. லாரியை சங்கராபுரம் தாலுகா அருகே உள்ள ஜம்படை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (32) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் பறக்கும்படையினர் கள்ளக்குறிச்சி தேர்தல் அதிகாரியும், ஆர்டீஓவுமான சண்முகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அந்த லாரியை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு வந்து மறைவாக நிறுத்தியிருந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த அதிமுக எம்எல்ஏ அழகுவேலுவின் கணவர் நகர செயலாளர் பாபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் ராஜசேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள், பறக்கும்படை அதிகாரி ரங்கசாமியிடம் பேசி, மினிலாரியை கொண்டு செல்ல முயன்றனர். அப்போது மினிலாரியில் இருந்து 5 பெட்டிகளை எடுத்து தாங்கள் வந்த காரில் எடுத்து வைத்துக்கொண்டு ‘சக்ஸஸ் சக்ஸஸ்’ என்ற கூறிச்சென்றார்களாம். (இந்த பெட்டியில் தான் கட்டுகட்டாக பணம் இருந்தாக கூறப்படுகிறது). தொடர்ந்து மினிலாரியில் இருந்த நோட்டீஸ்கள், போஸ்டர்கள் அடங்கிய மற்றொரு பெட்டியை பறக்கும்படை அதிகாரிகள் தங்களின் வாகனத்தில் எடுத்து சென்றனர். தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகம் வெளியே நின்ற அதிமுகவினரின் லாரியையும் கட்சியினர் எடுத்துச்சென்று விட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த திமுக வேட்பாளர் காமராஜ், நகர செயலாளர் சுப்புராயலு, ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம் மற்றும் திமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது ஆர்டிஓ அலுவலகத்தின் வெளிக்கதவு பூடப்பட்டிருந்தால் வெளியில் நின்றபடி கோஷமிட்டனர். சத்தம் கேட்டு வெளியே வந்த காவலாளி பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆர்டிஓ, தனது அலுவலகத்துக்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை எனவும், எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறியதாக காவலாளி தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் அனைவரும், அருகில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று டிஎஸ்பி மதிவாணனிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அலுவலகத்துக்கு வந்த ஆர்டிஓ மற்றும் டிஎஸ்பி மதிவாணன், வட்டாட்சியர் ராஜூ ஆகியோரிடம் திமுகவினர் மீண்டும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில் அதிமுக மாவட்ட அலுவலகத்துக்கு சென்றனர். இதேபோல் விழுப்புரத்தில் இருந்த வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள், அதிமுக அலுவலகத்தில் சோதனை நடத்தினர். எதையும் கைப்பற்றவில்லை. அங்கு பூத் சிலிப்புகளே இருந்ததாக தெரிவித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அதிமுகவினர் கடத்திச்சென்ற 5 பெட்டிகளிலும் பல கோடி ரூபாய் பணம் இருந்ததாக புகார் தெரிவித்தனர். இதனால் அதிகாலை 4 மணி வரை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.