அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்ய நஜீம் ஜைதியிடம் தம்பிதுரை மனு
5/2/2025 3:04:45 PM
திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி பெரும் அளவில் முறைகேடு செய்வதாகவும், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை காரணமாக 3 முறை ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.சட்டம் ஒழுங்கு டிஜிபி அசோக்குமார் தேர்தல்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் அவருக்கு பதில் போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி மகேந்திரன் தேர்தல்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். மேலும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு ஏடிஜிபி கரன்சின்ஹா நியமிக்கப்பட்டார்.
மேலும் ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை,தர்மபுரி, சேலம், நாமக்கல், ஆகிய 7 மாவட்ட எஸபிக்கள் மற்றும் கரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், வேலூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட 9 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.இதற்கிடையே தமிழக அதிகாரிகள் மாற்றத்தை வாபஸ் பெறக்கோரி தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று மனு கொடுத்தார். திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த நஜீம் ஜைதியிடம் தம்பிதுரை மனு கொடுத்தார். அப்போது இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் பொய் புகார்களை தேர்தல் கமிஷன் நம்பி விட்டது. இதனால்தான் ஒரேயடியாக ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடுநிலையாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆகவே இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இதை ஏற்று அதிகாரிகள் இடமாற்றத்தை தேர்தல்ஆணையம் வாபஸ் பெறும் என நம்புகிறோம்’’ என்றார்.மத்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தார். அவருடன் தேர்தல் ஆணையாளர்களான ஓம் பிரகாஷ் ராவத், ஏ.கே. ஜோதி மற்றும் அதிகாரிகளும் வந்தனர். தொடர்ந்து இன்று காலை திருவனந்தபுரம் தாஜ் ஓட்டலில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கேரள தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார்.