ஜெயிக்கப் போவது ஹீரோவா? வில்லனா? காமெடியனா? களை கட்டும் கேரள தேர்தல் களம்
5/2/2025 3:03:53 PM
திருவனந்தபுரம்: கேரள தேர்தலில் பதனாபுரம் தொகுதியில் பிரபல மலையாள நடிகர்கள் போட்டியில் குதித்துள்ளனர். இங்கு ஜெயிக்கப் போவது ஹீரோவா, வில்லனா, காமெடி நடிகரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கேரள தேர்தல் களம் முன் எப்போதை விடவும் இம்முறை சற்று மாறுபட்டுள்ளது. முன்பு கொள்கைகளையும், மக்கள் திட்டங்களையும் முன்வைத்து களத்தில் இறங்கிய கேரள அரசியல் கட்சிகள் தற்போது கவர்ச்சி அரசியலை நம்பி களம் இறங்கியுள்ளன. இதில் விதிவிலக்கின்றி தேசிய கட்சிகளான பாஜ, காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகள் இம்முறை நடிகர்களை களத்தில் இறக்கியுள்ளன. 3 கட்சிகளிலும் ஏராளமான நட்சித்திர பட்டாளங்கள் போட்டியில் குதித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பதனாபுரம் தொகுதியில் பிரபல நடிகர்களான எம்எல்ஏ கணேஷ்குமார், காமெடியனான ஜெகதீஷ், வில்லன் நடிகரான ரகு தாமோதரன் என்ற பீமன் ரகு ஆகியோர் மோதுகின்றனர். கணேஷ்குமார் காங்கிரஸ் கட்சி சார்பிலும், காமெடியன் ஜெகதீஷ் சிபிஎம் சார்பிலும், பாஜ சார்பில் வில்லன் நடிகரான பீமன் ரகுவும் போட்டியில் உள்ளனர். நடிகர்களால் இந்த தொகுதி பிரசாரம் களை கட்டியுள்ளது. வெற்றி பெற போவது ஹீரோவா, காமெடியனா, வில்லன் நடிகரா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.