பறக்கும் படைகள் திடீர் கலைப்பு புதிய படையில் மத்திய அரசு அதிகாரிகளும் சேர்ப்பு தேர்தல் கமிஷன் அடுத்தடுத்து அதிரடி
5/2/2025 2:26:41 PM
திருச்சி: ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைகள் அதிரடியாக கலைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்து சென்றாலும், பரிசுகள் வழங்கும் வகையில் பொருட்களை எடுத்து சென்றாலோ அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். இந்த பணிகளை தேர்தல் பறக்கும் படையினர் செய்து வருகிறார்கள். இவர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்(கலெக்டர்) மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
எனவே இவர்கள் ஆளுங்கட்சிக்காரர்களின் வாகனங்களையும், சில சங்கேத குறியீடுகளுடன் வரும் வாகனங்களையும் சோதிக்காமல் விட்டு விடுவதாகவும், அதனால் அதிமுகவினர் தாராளமாக பணத்தை கோடிக்கணக்கில் கடத்தி செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.இந்நிலையில்தான் தேர்தல் கமிஷன் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அசோக்குமார் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் இவருக்கு பதில் டிஜிபி மகேந்திரன் தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.இதுபோல உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி மாற்றப்பட்டு, கரன்சின்கா நியமிக்கப்பட்டார்.
தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றப்பட்டு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.இதேபோல கரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நெல்லை, சேலம், வேலூர், திருவாரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.தேர்தல் கமிஷன் அத்துடன் நிற்காமல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டிகே. ராஜேந்திரனை நீக்கிவிட்டு அசுதோஸ் சுக்லாவையும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதியை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்பில் கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலலேந்திரபாபுவையும் நியமித்தது.
தேர்தல் கமிஷன் மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக தேர்தல் பறக்கும்படைகள் அதிரடியாக கலைத்து மாற்றி அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக பறக்கும் படை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தொகுதியில் உள்ள பறக்கும்படை குழுவிலும் இடம் பெற்றிருந்த 5 பேரில் 2 அல்லது 3 பேர் என வேறு தொகுதியில் உள்ள பறக்கும் படைக்கு மாற்றி அமைத்து உள்ளனர். இதேபோல் ஒரு தொகுதியில் உள்ள பறக்கும் படை குழு மற்றொரு தொகுதிக்கு அப்படியே மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நேற்று இந்த மாற்றம் அமலுக்கு வந்தது.
ஒரே குழுவில் இடம் பெற்றிருந்த 5 பேரும் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஒன்றாகவே இருந்ததால் அவர்கள் அனைவரும் மேலிடத்தின் உத்தரவுபடி சில வாகனங்களுக்கு சலுகை காட்டியதாக வந்த புகார்களை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.நாளை முதல் இந்த பறக்கும்படை குழுவில் 6வது நபராக மத்திய அரசு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான உத்தரவு இன்று வரும் என எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். பறக்கும் படையில் சேர்க்கப்பட உள்ள மத்திய அரசு அதிகாரிகளின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவு வந்ததும் இவர்கள் 6 வது நபராக பறக்கும் படையில் இடம் பெறுவார்கள்.மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெறுவதால் அவர்கள் கலெக்டர், எஸ்பிக்கு கட்டுப்படாமல் நேர்மையாக பணியாற்றுவார்கள் என தேர்தல் கமிஷன் நம்புகிறது. கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் பறக்கும் படைகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படலாம் என தெரிகிறது. தேர்தலுக்குஇன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் பறக்கும்படையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடியால் ஆளுங்கட்சி தரப்பில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.