தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலில் போலீஸ் அதிகாரிகள் அராஜகம் மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
5/2/2025 2:19:51 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலின் பேரில் சில அதிகாரிகள் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. வரும் 5ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அதிக அளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 5ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் பல இடங்களில் இடதுசாரிகளுக்கும், திரிணாமுல் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் சம்பவங்களை போலீசார் தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலின் பேரில் ஒரு சில போலீஸ் அதிகாரிகள் அராஜகத்தை கட்டவிழ்த்து வருவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சாந்திபுரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தால் அது மிகவும் தவறு. யார் என்ன செய்கிறார்கள் என்பதை பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடுநிலையுடன் நடந்து கொள்பவர்கள் மீது அன்பு காட்டுவேன்.
என்னை பகைத்துக் கொள்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு மம்தா பேசினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அரசு அதிகாரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த காலகட்டத்தில் எந்த அதிகாரிகளையும் மாற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக எதிர்கட்சிகள் புகார் கூறிவருவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.