குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி
4/30/2016 12:40:25 PM
புனே: ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி புனேவில் நேற்று இரவு நடந்தது. குஜராத் லயன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் 101 (54 பந்துகள், 8 பவுண்டரி, 5 சிக்சர்), ரஹானே 53 ரன் (45 பந்துகள், 5 பவுண்டரி) எடுத்தனர். குஜராத் தரப்பில் பிராவோ ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திசாரா பெராரா வீசியஆட்டத்தின் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 விக்கெட்டுகளை அந்த ஓவரில் இழந்தபோதும், கடைசி பந்தில் குஜராத் த்ரில் வெற்றி பெற்றது. டிவைன் ஸ்மித் 63 (37 பந்துகள், 9 பவுண்டரி, 1 சிக்சர்), மெக்கல்லம் 43 (22 பந்துகள், 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 34, தினேஷ் கார்த்திக் 33 ரன் எடுத்தனர். புனே தரப்பில் டிண்டா, பெராரா தலா 2, பாட்டியா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் ஏற்கனவே குஜராத் அணியிடம் தோல்வியடைந்திருந்த புனே, தற்போது மீண்டும் தோல்வியடைந்தது. குஜராத்தின் டிவைன் ஸ்மித் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில், முதல் 6 ஓவர்களில் எங்கள் துவக்க வீரர்களை பந்தை அடித்து நொறுக்கி விட்டனர். ரெக்கார்டுகள் அடிப்படையில் பார்த்தால், சேசிங் செய்யும் அணி சிறப்பாக செயல்பட்டிருப்பதை பார்க்க முடியும். அதே நேரத்தில் விக்கெட்டுகளும் கையில் இருக்கும்போது, எவ்வளவு பெரிய ஸ்கோரையும் சேஸ் செய்ய முடியும். டோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததால் நான் அதிர்ஷ்டகரமானவன். அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டுள்ளேன்.
துரதிருஷ்டவசமாக அவரது அணி இன்று தோல்வியடைந்து விட்டது. இன்று இரவு (நேற்று) அவரை நான் சந்திக்க போவதில்லை. அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பதால், தாமதமாக அவரை சந்திப்பேன் என்றார். புனே கேப்டன் டோனி கூறுகையில், பந்து வீச்சு எங்களுக்கு சரியாக அமையவில்லை. புதிய பந்துகளில் பந்து வீசுவதை நாங்கள் மேம்படுத்த வேண்டும். வீரர்கள் காயமடைவது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது. பேட்டிங் துறையில் சில வீரர்களை காயம் காரணமாக நாங்கள் இழந்து விட்டோம். ஆனால் புதிய பந்துகளில் சரியாக பந்து வீச முடியாமல்தான் தொடர்ச்சியாக தடுமாறி வருகிறோம். அடுத்த போட்டியில் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.