அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி
4/28/2016 2:29:35 PM
திருவனந்தபுரம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், அம்மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட மைதானங்களில், ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 1ம் தேதி புனேவில் நடைபெற உள்ள ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி, மும்பை மற்றும் மகாராஷ்ரா கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இந்த பிரச்னைகள் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டில் நடத்த வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். கடந்த வாரம் அளித்த பேட்டியின் போது அனுராக் தாக்கூர் இதை தெரிவித்திருந்தார். ஐபிஎல் தொடர் இதுவரை இரண்டு முறை வெளிநாடுகளில் நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும், 2014ம் ஆண்டின் முதல் 15 நாட்கள் யுனைடெட் அரபு எமிரேட்சிலும் நடந்துள்ளது. ஆனால் பிசிசிஐயின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் மூலம் நாட்டிற்கு நிறைய வருவாய் கிடைக்கிறது. இதை வெளிநாட்டில் நடத்த கூடாது என்றார்.