நன்னடத்தை விதிகளை மீறவில்லை தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு மே.வங்க முதல்வர் மம்தா பதில்
4/21/2016 3:12:26 PM
கொல்கத்தா: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தை விதிகள் எதையும் மீறவில்லை என தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் அசன்சால் தொகுதியில் இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நடத்தை விதிகளை மீறி புதிய மாவட்டம் உருவாக்குவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசியதாக காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மாநில தலைமை செயலர் பாசுதேவ் பானர்ஜி பதில் அளித்தார்.
இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடியும் மம்தாவின் செயலை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையத்துடன் மம்தா மோதி வருவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையில் தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு மம்தா தான் பதில் அளிக்க வேண்டும். தலைமை செயலரின் பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என மம்தா எச்சரித்தார்.
இருப்பினும் தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு நேற்று அவர் பதில் அளித்தார். தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நடத்தை விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், அசல்சால் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க கடந்த டிசம்பர் மாதமே கேபினட் ஒப்புதல் அளித்து விட்டதாகவும், தான் புதிதாக எதையும் அறிவிக்கவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.