அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் கிருஷ்ணசாமி பேட்டி
4/21/2016 3:11:17 PM
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி வேட்பாளர்கள் அன்பழகன், முத்துக்குமார், ஜி.கே. அய்யர் ஆகியோருடன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, வேட்பாளர்களுக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை ஆகிய நாங்கள் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. இது வலுவான கூட்டணி. திமுக தேர்தல் அறிக்கை, கருணாநிதி, ஸ்டாலின் பிரச்சாரம், வேட்பாளர்களின் தகுதி ஆகியவை மூலம் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
எங்கள் கட்சியில் நானும், அன்பழகனும் டாக்டர்கள், மற்ற இரண்டு பேரும் பொறியாளர்கள். மக்களை தேடிச்சென்று பணியாற்றுபவர்கள். நாளை முதல் நான் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன். ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் கை கட்டி கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.