ஜெ. கூட்டத்தில் 2 பேர் பலி : தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை ராஜேஷ் லக்கானி பேட்டி
4/21/2016 3:10:11 PM
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் 234 பேர் நாளைக்குள் தமிழகம் வந்து விடுகிறார்கள். 32 போலீஸ் பார்வையாளர்கள், 122 பொது பார்வையாளர்கள் 29ம் தேதி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 லட்சம் பேருக்கும் 3 பயிற்சி வகுப்புகள் நடைபெறும். முதல் பயிற்சி வகுப்பு வரும் ஞாயிறன்று நடக்கிறது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் கட்டாயம் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கு அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்ப்பிணி பெண்கள் மட்டும் அந்தந்த தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று பணியில் விலக்கு பெறலாம். சேலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் இரண்டு பேர் இறந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இது பற்றிய அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி என்ற முறையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளேன். மேலும் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுத்துள்ளனர். இதையொட்டி, ஒரு சில அதிகாரிகளை மாற்றுவதற்கான உத்தரவு நாளை வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.