ஆலந்தூரில் திமுக வேட்பாளர் அறிமுகம் தமிழகத்தில் திமுக அலை வீசுகிறது மா.சுப்பிரமணியன் பேச்சு
4/21/2016 3:06:55 PM
ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை ஆதம்பாக்கம், அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், செயற்குழு உறுப்பினர் கீதா ஆனந்தன், காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் பிராங்க்ளின் பிரகாஷ், வட்டாரத் தலைவர் எம்.வி.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தா.மோ.அன்பரசனை அறிமுகப்படுத்தி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் தா.மோ.அன்பரசன், இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, பின்னர் அமைச்சராகி பல்வேறு மக்கள்நலப் பணிகளை நிறைவேற்றி தந்துள்ளார். ஆனால், அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்கள் எந்த மக்கள்நலப் பணிகளையும் செய்யாததால், இப்போது ஓட்டு கேட்கப் போகும் இடங்களில் நத்தம் விஸ்வநாதன் முதல் அன்வர் ராஜா வரை மக்களால் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.இப்போது எங்கு பார்த்தாலும் திமுக அலை வீசிக்கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார். பின்னர் திமுக வேட்பாளர் அன்பரசன் பேசும்போது, ‘ஆலந்தூரில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், தரமான தார்சாலைகள், பூங்காக்கள், மின்நிலையங்கள் என பல கோடி திட்டங்களை திமுக ஆட்சியின்போது நிறைவேற்றி தந்துள்ளேன். என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால், இங்கு விடுபட்டு போன பணிகளை உறுதியாக நிறைவேற்றி தருவேன்’ என்றார்.இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.ஆர்.சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.