மே.வங்க 3ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு
4/21/2016 2:36:12 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3ம் கட்டமாக 62 தொகுதிகளில் இன்று நடைபெற்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாயின.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுடன் மேற்குவங்க சட்டமன்றத்துக்கும் கடந்த மார்ச் 4ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் கடந்த 4 மற்றும் 11 தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தன. இதில் சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாயின. மூன்றாம் கட்டமாக இன்று முர்ஷிதாபாத், நாடியான, பர்தான் மாவட்டங்கள் மற்றும் வடக்கு கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் 62 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 34 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 418 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 42 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 65 லட்சம் பேர் பெண்கள். மக்கள் வாக்களிப்பதற்காக சுமார் 16 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்த பயமும் இன்றி வாக்களிப்பதற்காக 75 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநில போலீசாரும் சேர்ந்து மொத்தம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பாதுகாப்பு வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் வெளிப்புற பாதுகாப்பு பணியில் விரைவாக பதில் தரும் குழு, 190 பறக்கும் படை குழுக்கள், 194 கண்காணிப்பு குழுவினர் பணியில் உள்ளனர். இது தவிர இணையதள கேமிரா மூலம் கண்காணிப்பு, வீடியோ டிஜிட்டல் கேமிராவும் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.