ஸ்ரீரங்கத்தில் நாளை கஜேந்திர மோட்சம்
4/21/2016 2:35:22 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.கஜேந்திரன் யானையாக சாபம் பெற்ற மன்னனுக்கும், முதலையாக சாபம் பெற்ற கந்தர்வனுக்கும் பெருமாள் சக்ராயுதத்தால் சாப விமோசனம் அருளினார். இதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ரங்கம் அம்மா மண்டபத்தில் சித்ரா பவுர்ணமி தினத்தில் கஜேந்திர மோட்ச வைபவம் நடக்கிறது. இதையொட்டி, நாளை(22ம் தேதி) காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டப கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10 மணிக்கு எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 12 முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, கோயில் யானை ஆண்டாள், கஜேந்திரனாக நடித்துக் காட்டும். அதன்பின் இரவு 8.15 மணியளவில் நம்பெருமாள், அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.