வாலிபர் கொலையில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு
4/21/2016 2:35:00 PM
அரியலூர்: ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் சின்னி ஜெயந்த்(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். சின்னி ஜெயந்தின் தம்பி விநாயக ஆனந்த்தின் மனைவி கவுதமி(22), போலீஸ் வேலைக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அதே ஊரை சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் திவாகர்(22) என்பவரின் உதவியை நாடினார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் திவாகர் கவுதமியின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், திவாகரை கண்டித்தார் சின்னிஜெயந்த். ஆனாலும், கடந்த 2012 ஏப்ரல் 19ல் கவுதமி வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, சின்னிஜெயந்த், திவாகரை தாக்கினார்.
ஆத்திரமடைந்த திவாகர், மறுநாள் 20ம் தேதி தனது தந்தை அய்யாபிள்ளை மற்றும் கூட்டாளிகள் சுரேஷ்(23), பரமசிவம்(40), மணிகண்டன்(33), பார்த்தீபன்(30), விக்னேஷ்(39), அர்ஜூனன்(60), ஆனந்த்(30), அன்பரசன்(45), கலைமணி(26), குண்டு சுரேஷ்(27), சுரேஷ்(22), கொளஞ்சி(22) ஆகியோருடன் சின்னிஜெயந்த் வீட்டுக்கு சென்று, உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி கொன்றனர்.
ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து திவாகர் உட்பட 14 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஹ்மான், குற்றவாளிகள் 14 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 14 பேரையும் பலத்த பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். தீர்ப்பு வழங்கப்பட்ட இதேநாளில்தான் 2 வருடங்களுக்கு முன்பு சின்னி ஜெயந்த் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.