வறட்சியால் ராய்ப்பூரிலும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கோர்ட்டில் பொதுநல வழக்கு
4/21/2016 2:33:20 PM
ராய்ப்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில், மைதான பராமரிப்புக்காக அதிகப்படியான தண்ணீர் செலவிடப்படுவதாக மனுவில் கூறப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற பிசிசிஐக்கு உத்தரவிட்டது. இதன்படி 13 போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் பிசிசிஐக்கு ஏற்பட்டது. ஆனால் புனே மைதானத்தில் மட்டும் மே 1ம் தேதி புனே-மும்ைப அணிகளுக்கு இடையேயான போட்டியை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
மும்பை அணி தனது உள்ளூர் போட்டிகளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் ஜெய்ப்பூரிலும் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், எனவே இங்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே போட்டிகளை இடம்மாற்றும் திட்டத்தின்படி மே 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர்நாராயணன்சிங் ஸ்டேடியத்தில் 2 ேபாட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் பொது நல வழக்கு வடிவில் இதற்கும் சோதனை எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களான சுக்லா மற்றும் அபிஷேக் பிரதாப் ஆகியோர் பிலாஸ்பூரில் உள்ள சட்டீஸ்கர் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடும் வறட்சி நிலவி வருவதால், ஐபிஎல்லின் 2 போட்டிகளை ராய்ப்பூரில் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த பிரச்னை தொடர்பாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், இந்த பிரச்னை ஐபிஎல்லை பாதிக்கும். அணியின் உரிமையாளர்களுக்கு இது நியாயமற்றது. இது எங்கள் வியாபாரத்தை பாதிக்கும். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது புரளி எழுந்து விடுகிறது. ஆனால் ஐபிஎல்லுக்கு நன்றி. இதன் மூலமாகதான் கபடி லீக், ஐஎஸ்எல், பேட்மின்டன் லீக், ஹாக்கி லீக் தொடர்கள் உருவானது. ஆனால் நீதித்துறைக்கு நான் முழு மதிப்பளிக்கிறேன் என்றார்.