பிரசாரத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா? ஜெ. கூட்டங்களில் இதுவரை 5 பேர் பலி : தேர்தல் கமிஷன் தலையிட தலைவர்கள் வலியுறுத்தல்
4/21/2016 2:28:39 PM
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் பகல் நேர பிரசாரத்தில் வெயில் கொடுமையால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி நடத்தப்படும் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் நடத்தி வருகிறார். அனைத்து பிரசார கூட்டங்களும் மதியம் 2 மணிக்கு நடத்தப்படுகிறது.
ஆனால், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனாலும், ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு பல தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரை வரவழைத்து குவிக்கின்றனர். அவர் வருவதற்கு பல மணி ேநரங்களுக்கு முன்பாகவே வெயிலில் அமர வைப்பதால் பலர் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அதிமுகவினர் வழங்கும் பணம் மற்றும் பிரியாணி பொட்டலங்களுக்கு ஆசைப்பட்டு வரும் அப்பாவி மக்கள்தான் இதில் பாதிக்கப்படுகின்றனர்.சேலத்தில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், மேற்கு மாவட்டங்கள் மட்டும் கேரள மாநில வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சேலம் அருகே மகுடஞ்சாவடியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். இதில் வெயில் கொடுமைக்கு மகுடஞ்சாவடியை சேர்ந்த பச்சியண்ணன்(55), சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பெரியசாமி(65) ஆகியோர் சுருண்டு விழுந்து இறந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த பெண் எஸ்.ஐ கற்பகம், ஒரு பெண் ஏட்டு உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஏற்கனவே விருத்தாச்சலத்தில் நடந்த ஜெ. பிரசாரத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என வெயில் கொடுமையால் பலியாகியுள்ளனர். சேலத்திலும் சேர்த்து இதுவரை 5பேர் பலியாகியுள்ளனர். தமிழக தேர்தல் வரலாற்றில் பிரசார கூட்டங்களில் தொடர்ந்து தொண்டர்கள் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை. தலைவர்கள் கண்டனம்: திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது, ‘‘இன்னும் எத்தனை பிணங்கள் மீது ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார்? தொடர் சம்பவங்கள் நடந்தபோதும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ‘‘மக்களை நேரில் சென்று சந்திப்பதுதான் அரசியல் தலைவர்கள் வழக்கம்.
தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இப்படி ஒரே இடத்தில் பல பேரை திரட்டி உயிர்பலி ஏற்படுவதற்கு ஜெயலலிதாவின் பிரசார அணுகுமுறையே காரணம். அவரது சவுகரியத்திற்காக அப்பாவி மக்களை பழி வாங்குவது எந்த வகையில் நியாயம்’’ என்றும் கேட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ‘‘இந்த விஷயத்தில் இனியும் தேர்தல் ஆணையம் மவுனம் சாதிக்கக் கூடாது. இது மனித உரிமை மீறலாக கருதி, ஜெயலலிதா இனி மாலையில் பிரசாரத்தை நடத்த செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.பிரசாரத்தில் மாற்றம் வருமா?: தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிமுகவினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்ந்தால் அதிமுகவுக்கு கடும் வீழ்ச்சி ஏற்படும் என அக்கட்சி தலைவர்கள் கவலையடைந்துள்ளனர். அதனால், இனிமேல் விமான நிலையத்தை ஒட்டிய முக்கிய நகரங்களில் மட்டும் ஜெயலலிதாவின் பிரசார கூட்டம் நடத்தப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரள மாநில வேட்பாளர்கள் 57 பேரை வரவழைத்து பிரசாரம் நடத்தப்பட்டது. அதேபோல், காவிரி டெல்டா மாவட்ட வேட்பாளர்கள் அனைவரையும் திருச்சியில் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்திற்கு வரவழைத்து ஓட்டு கேட்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பொதுக்கூட்ட ேநரம் மாலை 4 மணிக்கு மேல் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.