அதிமுக ஆட்சியில் தமிழகம் குட்டிச்சுவர் விஜயகாந்த் பேச்சு
4/21/2016 2:23:05 PM
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில்தான் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அதிமுக அரசு தமிழகத்தைச் குட்டிச்சுவராக்கி விட்டது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். ஆனால் விலைவாசி உயர்வை அதிமுக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் 3 மாதத்தில் கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுகிறாரே, அவருடைய சிறுதாவூர் பங்களா, அப்புறம் என்னவோ கார்டன் (பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டுவிட்டு) ஆமா... போயஸ்கார்டன், ஊட்டி எஸ்டேட் போன்றவற்றை மக்களுக்கு தந்துவிடுவாரா? பாஜவினரும், அதிமுகவினரும் தொட்டிலையும் கிள்ளிவிட்டு குழந்தையையும் ஆட்டுகின்றனர் (பழமொழியை தவறாகச் சொன்னார்). இந்த ஊர் திருச்சி குளித்தலைதானே (கூட்டத்தினரைப் பார்த்து கேட்கிறார்)... எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.கைத்தாங்கலாக: விஜயகாந்த் 6 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 9 மணிக்குதான் குளித்தலைக்கு வந்தார். அவரை கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையிலிருந்து இறங்கும்போதும் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். கரூர் தேமுதிக வேட்பாளர் சோமூர் ரவி, அரவக்குறிச்சி மதிமுக வேட்பாளர் கலையரசன், குளித்தலை தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜமுனா தங்கவேல், கிருஷ்ணராயபுரம் தமாகா வேட்பாளர் சிவானந்தம் ஆகியோரை விஜயகாந்த் அறிமுகம் செய்தார். வேட்பாளர்களின் பெயர்களை கூறியபோது சோமூர் ரவியின் பெயரை அவரால் சரியாக சொல்லவே முடியவில்லை.