நிதிஷ்குமார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் சொல்கிறார் லாலு பிரசாத்
4/20/2016 2:46:39 PM
பாட்னா: நிதிஷ்குமார் பிரதமரானால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றும், பாஜ அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்க அவர் பாடுபட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.பீகார் தலைநகர் பாட்னாவில், நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகனும், மாநில சாலைப் போக்குவரத்து துறை அமைச்சருமான தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ‘நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. அவரை என்னுடைய இளைய சகோதரர் போன்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் நிதிஷ்குமார் பிரதமரானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். பாஜ அல்லாத கட்சிகளை நிதிஷ்குமார் ஒங்கிணைக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் நிதின் கட்கரியை பாராட்டுகிறேன். பீகாரில் சாலைகளை மேம்படுத்த நிதின் கட்கரி ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத், முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். பாஜவை வீழ்த்த இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில், நிதிஷ்குமார் அமோக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார். தற்போதைய அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு கணிசமான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.