புழல் பகுதியில் வணிகவரி சோதனை சாவடியால் வாகன நெரிசல் இடம் மாற்ற செய்ய கோரிக்கை
4/16/2016 12:48:58 PM
புழல்: ஜிஎன்டி சாலை பகுதியில் புழல் அருகே வணிகவரி சோதனை சாவடி மையத்தில் வெளிமாநிலம் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.புழல், காவாங்கரை ஜிஎன்டி சாலை அருகே தமிழக வணிகவரி சோதனை சாவடி மையம் உள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் கொல்கத்தாவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை ஜிஎன்டி சாலையிலேயே வணிகவரி அதிகாரிகள் நிறுத்துவது வழக்கம்.இந்த வாகனங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான ஆவணங்களின் சோதனைகளை முடித்து, அவர்கள் பணம் கட்டி வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு நீண்ட நேரம் தாமதம் ஏற்படுகிறது.
ஜிஎன்டி சாலையிலேயே பெருமளவு கனரக லாரிகள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுமார் 50 அடி தூரத்திலேயே காவாங்கரை சிக்னல் உள்ளது. இந்த சிக்னலினாலும் இங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.வணிகவரி சோதனை மையத்தை ஒட்டிய ஜிஎன்டி சாலையில் பெரும்பாலான நேரங்களில் கனரக வாகனங்கள் தாறுமாறாகவும், ஒன்றை ஒன்று முந்திச் செல்லும்போதும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பலமுறை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இங்குள்ள வணிகவரி சோதனை அலுவலகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத சோழவரம் பைபாஸ் சாலை அருகே மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.