மத்திய சென்னையின் முக்கிய பகுதி கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது நுங்கம்பாக்கம் மக்கள் அவதி, அதிகாரிகள் அலட்சியம்
4/9/2025 12:12:14 PM
சென்னை நகரில் மத்திய சென்னையின் இதயப் பகுதியாக நுங்கம்பாக்கம் விளங்கி வருகிறது.கிழக்கே அண்ணாசாலையையும் மேற்கே கோடம்பாக்கம் பகுதியையும் வடக்கே கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளையும் தெற்கே தி.நகர் உள்ளிட்ட பகுதிகளையும் ஒருங்கிணைப்பதால் இப்பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.ஆனால், நுங்கம்பாக்கத்தின் பெரும்பாலான தெருக்களில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் பெரும்பாலும் கழிவுநீர் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் ஒரு கையில் மூக்கை பொத்தியபடி கடந்து செல்வர். அங்கு வசிப்போருக்கு இங்கு கழிவுநீர் தேங்குவது பழகிவிட்டதால் தலைவிதியை நொந்தபடி வாழ்க்கை நடத்துகின்றனர்.
குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பு தெரு, ராமநாயக்கன் தெரு, ஜோசியர் தெரு, ஜெகதாம்பாள் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ரட்லண்ட் கேட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் உள்ளன.இந்த அலுவலகங்களில் அதிகளவு கழிவுகள் வெளியேறுவதற்கு போதிய வசதிகள் அமைக்கப்படாததால், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் முக்கிய சாலைகளில் இருக்கும் மெயின் லைனில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் 2 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் சாலைகளில் வெள்ளமாக ஓடி வருகிறது.
இதுதவிர, முக்கிய சாலைகளில் தொடர்ச்சியாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களின தொடர் அழுத்தத்தினால் மெயின் லைனில் உள்ள கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்துவிடுகின்றன.இதுகுறித்து சம்பந்தப்பட்ட கழிவுநீரகற்று வாரிய பகுதி அலுவலகத்தில் புகார் தெரிவித்தாலும், உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதேபோல், லயோலா கல்லூரி அருகே உள்ள புஷ்பா நகர் பகுதியிலும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் வள்ளுவர்கோட்டத்தின் பின்புறம் உள்ள பல்வேறு தெருக்களில் எப்போதும் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும்.மேலும், வள்ளுவர்கோட்டம் அருகே குப்பை சேகரிக்கும் பகுதியில் லாரிகள் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோயும் ஏற்படுகிறது என்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி வாரிய ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘எங்கள் பகுதி அலுவலகத்துக்கு ஒரு பெரிய ஜெட்ராடர் லாரியும் 2 சிறிய கழிவுநீர் வண்டிகளும் உள்ளன. இங்குள்ள விவிஐபிக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை எடுக்கும் பணியில் பெரிய ஜெட்ராடர் லாரி எப்போதும் பிசி.
இங்குள்ள 2 சிறிய வாகனங்களில் ஒன்று எப்போதுமே ரிப்பேராகி நிற்கும். மற்றொரு வாகனத்தில்தான் அனைத்து பகுதிகளிலும கழிவுநீர் அடைப்புகளை எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் அடைப்பு எடுக்கும்போதே, மற்றொரு பகுதிக்கு போகுமாறு அதிகாரிகள் தொந்தரவு செய்வர்.இதனால் எந்த பகுதியிலும் எங்களால் முறையாக கழிவுகளை அகற்ற முடியவில்லை. பொதுமக்கள் பிரச்னை செய்கிறபோது, நாங்கள்தான் அவர்களிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்க வேண்டிய அவலநிலை உள்ளது’ என்று பெரும்பாலான தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்னைகள் குறித்து இப்பகுதிமக்கள் கூறும்போது, ‘புஷ்பா நகர் மற்றும் ஜம்புலிங்கம் தெரு, ஜோசியர் தெரு, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடி வருகிறது.இதுகுறித்து வாரிய அதிகாரிகளிடம் நேரில் கூறினால், அவர்களும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். இதுவே இங்குள்ள பெரிய நிறுவனங்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தால், அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் பகுதியை பொறுத்தவரை, மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை எடுப்பதைவிட, பெரிய நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் ஏற்படும் அடைப்புகளை எடுப்பதில் மட்டும் வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் நாள்தோறும் அவர்கள் பணி செய்வது போல் தெரிந்தாலும், இங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் எப்போதும் கழிவுநீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வுதான் இன்னும் கிடைக்கவே இல்லை.ஓட்டு போடுவதற்கு மட்டும் எங்களை அணுகும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் கவுன்சிலர்களும், இதுபோன்ற பிரச்னைகளில் ஓட்டு போட்ட மக்களை கண்டுகொள்வதில்லை.
அவர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது. வரும் தேர்தலில் அவர்களுக்கு நிச்சயம் பதிலடி தருவோம்’ என்று ஏராளமான பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.சென்னை நகரில் இப்போதும் பக்தியும் அமைதியும் குடிகொண்டிருக்கும் நுங்கம்பாக்கம் பகுதியில் எந்நேரமும் கழிவுநீர் ஓடிக்கொண்டிருப்பதால், விரைவில் இப்பகுதிக்கு ‘கழிவுநீர் ஓடை’ என்று பெயர் மாற்றிவிடுவார்களோ என்று இப்பகுதி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்குமா? காலம் பதில் சொல்லும்.