திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 50 தரிசன டிக்கெட் திடீர் ரத்து
4/2/2025 12:15:17 PM
திருமலை: திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் பக்தர்களிடம் குறைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்கும் டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நிருபர்களிடம் சாம்பசிவராவ் பேசியதாவது :ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஒரு அறை மட்டும் ஒதுக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் கொடிமரத்தை தாண்டி செல்லும்போது பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க பல நடவடிக்கை எடுத்தாலும் தள்ளுமுள்ளு தொடர்கிறது.
மாற்று யோசனை செய்யப்படும். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் தேவஸ்தானம் சார்பில் இயங்கும் இலவச பஸ் மட்டுமல்லாமல், அரசு சார்பில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், பாபவிநாசத்திற்கு அதிக பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் எத்தனை பேர் வந்தாலும், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மணிக்கணக்கில் காத்திருக்காமல் பக்தர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ரூ. 50க்கான டிக்கெட் விற்பனையை ரத்து செய்ய தேவஸ்தானம் ஏற்கனவே முடிவு செய்தது. ஆனால் சில காரணங்களுக்காக அதை ரத்து செய்யாமல் ஒரு நாளைக்கு 2,000 டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடைக்காலத்தில் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரூ. 50க்கான டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ள போது சுவாமியின் அருகில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கேட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். தேவஸ்தானம் சார்பில் இயங்கிவரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தெலுங்கில் ஒளிபரப்பி வருகிறோம். வரும் 14ம் தேதி முதல் தமிழிலிலும் இரவு 7.30 மணிமுதல் 9.30 மணிவரை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.