சேஷாசல வனப்பகுதியில் 50 சிறுத்தைகள்: பக்தர்கள் அதிர்ச்சி
3/29/2016 2:42:02 PM
திருமலை: சேஷாசல வனப்பகுதியில் 50 சிறுத்தைகள் உள்ளதாக தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆந்திர மாநிலத்தில், சேஷாசல வனப்பகுதி கிழக்கே கடப்பா மாவட்ட வனப்பகுதியில் இருந்து மேற்கே சித்தூர் மாவட்டம் தலக்கோனா வரை பரந்துவிரிந்து காணப்படுகிறது. இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நடைபாதையில் நடந்து வந்த காஞ்சனா என்ற சிறுமியை சிறுத்தை தாக்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.எனவே ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திருமலையில் உள்ள மான்பூங்கா அருகே வனத்துறை சார்பில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு, ஒரு ஆண் சிறுத்தையை பிடித்தனர். 27ம் தேதி மேலும் ஒரு ஆண் சிறுத்தைபிடிக்கப்பட்டு, ராஜம்பேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி இரவு அலிபிரி மலைப்பாதை காளிகோபுரம் அருகே கடை வைத்துள்ள அமர்நாத் என்பவர் தூங்கிக்கொண்டு இருந்தபோது சிறுத்தை தாக்கிவிட்டு சென்றது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர்.தற்போது, ஸ்ரீவெங்கடேஸ்வரா வனவிலங்கு பூங்காவிற்கு உட்பட்ட இடத்தில் 6 சிறுத்தைகள் மற்றும் மாமண்டூர் வனச்சரகத்தில் 10 சிறுத்தைகள் உட்பட மொத்தம் 50 சிறுத்தைகள் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இதுகுறித்து, தேவஸ்தான வன அலுவலர் சிவராம் பிரசாத் கூறுகையில், சிறுத்தைகளுக்கு மனிதர்களை கண்டால் பயம். ஆனால், நாம் அதனைப்பார்த்து பயப்படுகிறோம். சிறுத்தைகள் இரை தேட மட்டுமே வனப்பகுதியில் இருந்து வெளியே வரும். அதற்கு நாய்கள்தான் பிரியமான உணவாகும். சிறுத்தைகள் தங்களை காத்துக்கொள்ளத்தான் மனிதர்களை தாக்குகிறது. இருந்தாலும், மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.