சென்னை மற்றும் புறநகரின் சாலையோரங்களில் பயன்படாத நவீன கழிவறைகள் கோடிக்கணக்கில் பணம் வீண், அதிகாரிகள் மெத்தனம்
3/29/2016 2:10:29 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த நகராட்சிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ‘இ-டாய்லெட்’ எனப்படும் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டது. இதற்காக சென்னை கோபாலபுரம், ராயப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, சைதாப்பேட்டை, கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், பிராட்வே, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் மார்க்கெட் பகுதிகளில் புதிய கழிவறைகள் அமைக்கப்பட்டன. அதன் அருகே தண்ணீர் தொட்டியும் கண்காட்சி போல் வைக்கப்பட்டது.
ஆனால், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்கள் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகள் மூலம் பலகோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன கழிவறைகள் திறக்கப்படாமல், மக்களுக்கு வெறும் கண்காட்சி பொருளாகவே காட்சியளித்து வருகிறது.குறிப்பாக, ஆவடி நகராட்சியில் ரூ . 2 கோடி மதிப்பீட்டில் ‘நம்ம டாய்லெட்’ எனும் நவீன கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு, இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படவில்லை.சமீபத்தில் ‘திறந்தவெளியில் மக்கள் மலம் கழிப்பதை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம்’ என தமிழக அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் மூலம் பழைய கழிப்பிடங்களைப் பழுது பார்ப்பதற்கும், நவீன கழிவறை அமைப்பதற்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் விளைவாக ‘நம்ம டாய்லெட்’ திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் மக்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் 600 நவீன ‘நம்ம டாய்லெட்’டுகள் கட்ட முடிவு செய்து உருவாக்கப்பட்டன.அவ்வகையில், ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம், அருந்ததிபுரம், சேக்காடு, ஆற்றோர தெரு, மிட்டினமல்லி, லெட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ . 2 கோடி மதிப்பில் நவீன கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வருடமாக அந்த கழிவறைகள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படாமல் மூடிய நிலையிலேயே பாழாகி வருகிறது.இதனால் அந்த கழிவறை அருகிலேயே ஏராளமானவர்கள் சிறுநீர், மலம் கழிப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, அங்கு தொற்றுநோய்கள் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளால் அமைக்கப்பட்டு உள்ள நவீன கழிவறைகளும் போதிய பராமரிப்பு இல்லாமல், பல்வேறு இடங்களில் கழிவறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.இதுகுறித்து ஒருசில மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. நீங்களே இடத்தை தேர்வு செய்து, குறிப்பிட்ட தேதிக்குள் கழிவறை பொருட்களை நிர்மாணித்து விடுங்கள்.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக கூறுகின்றனர்.இதனால் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கிடைக்காமல், அந்தந்த பகுதிகளில் உள்ள நடைபாதைகளிலும் குப்பைமேடுகளிலும் நவீன கழிவறைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இக்கழிவறைகளுக்கான குடிநீர் இணைப்புக்கான அனுமதியை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தரவில்லை.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் செயல்பாட்டில் உள்ள நவீன கழிவறைகளில் பராமரிப்புக்கு ஆட்களை நியமிக்க உயர் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர், இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரிடம் அதிகளவில் பணம் வாங்கிக்கொண்டு குத்தகைக்கு விட்டு வருகின்றனர். குத்தகைக்கு எடுத்தவர்களும் ஆளுங்கட்சி ஆட்களே என்பதால், அவர்கள் பொதுமக்களிடம் ரூ . 5 வசூலித்து வருகின்றனர். இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று அனைத்து அதிகாரிகளும் சோகத்துடன் கூறுகின்றனர்.
‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் ஏற்கெனவே கட்டண கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். தற்போது ஆளுங்கட்சி நிர்வாகிகள் சம்பாதிப்பதற்காக, மக்களுக்கு இடைஞ்சலாக நடைபாதைகளிலும் குப்பைமேடுகளிலும் நவீன கழிவறைகளை அமைத்துவிடுகின்றனர்.அங்கு குடிநீர் இணைப்புகூட வழங்கப்படுவதில்லை. இதனால் யாரோ ஒருசிலர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக, மக்களின் வரிப்பணம்தான் வீணாகி வருகிறது. அவர்களின் கடன்சுமையும் அதிகரித்து வருகிறது’ என்று மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.