நேர்த்திக்கடன் செலுத்த பால்குடம் சுமந்து வந்த செல்லப்பிராணி தர்மபுரி அருகே விநோதம்
3/24/2016 2:22:36 PM
தர்மபுரி: தர்மபுரி அருகே பங்குனி உத்திரத்தையொட்டி, முருகனுக்கு பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நாயை பார்த்து பக்தர்கள் வியப்படைந்தனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல்(40). இவர் மணி என்ற நாயை வளர்த்து வருகிறார். தும்பலஅள்ளி பால்சொசைட்டிக்கு பால் ஊற்ற தினசரி காலை, மாலை நேரங்களில் செல்லும் போது, மணியையும் உடன் அழைத்து செல்வார். அப்போது, படிப்படியாக பயிற்சி அளித்து பால் ஊற்றிய கேனை கொண்டு செல்லவும், பின்னர் கடைகளில் இருந்து காலி கேன்களை திரும்ப கொண்டு வரவும் பழக்கினார். நாளடைவில், பால் ஊற்றி வருவதற்காக மணிக்கு பிரத்யேகமாக சிறிய வண்டியை செய்தார். அந்த வண்டியில் பால் கேனை வைத்தால், சொசைட்டிக்கு சென்று பால் கொடுத்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுக்கு முன், சொசைட்டிக்கு பால் கொண்டு சென்ற மணி மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அதன் கால் முறிந்தது. கால்நடை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்த பின்பும், சரிவர நடக்க முடியாமல் மணி அவதிப்பட்டது. இதனையடுத்து, மணி பூரண குணமடைந்தால், தும்பலஅள்ளி பாலமுருகன் கோயிலுக்கு அலகு ஏந்தி பால் குடம் சுமந்து வர செய்வதாக தங்கவேல் வேண்டுதல் வைத்தார். அதன் பிறகு, மணி குணமடைந்து முன்பு போல நடமாடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்தாண்டு பங்குனி உத்திரம் அன்று பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மணிக்கு திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து அதற்கென செய்யப்பட்ட சிறு வண்டியில் பூட்டினர். பின்னர், மணி அலகு ஏந்தி பால்குடம் சுமந்தபடி ஊரில் இருந்து பாலமுருகன் கோயிலுக்கு பக்தர்களோடு ஊர்வலமாக சுமார் ஒரு கிமீ நடந்து வந்தது. இந்த செல்லப்பிராணியின் நேர்த்திக்கடன் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுக்கு முன் விபத்தில் மணியின் கால் முறிந்தது. அது குணமடைய பாலமுருகன் கோயிலில் வேண்டுதல் வைத்தேன். அது நிறைவேறியதால் நேர்த்திக்கடன் செலுத்த வைத்துள்ளேன்’ என்றார்.