குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்
3/23/2016 2:15:22 PM
புதுடெல்லி: பெல்ஜியத்தில் குண்டு வெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி செல்கிறார்.பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்செல்ஸ் நகரில் விமான நிலையத்தில் நேற்று தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழலில் வருகிற 30ம் தேதி பிரதமர் மோடி பிரஸ்செல்ஸ் நகருக்கு செல்கிறார் என தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்கா செல்லும் வழியில் வருகிற 30ம் தேதி பிரஸ்செல்ஸ் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரஸ்செல்ஸ் பயணத்தை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த போதிலும் மோடியின் பிரஸ்செல்ஸ் பயணத் திட்டத்தில் மாற்றம் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பின்னர் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் மோடி முதன் முறையாக சவுதி அரேபியாவுக்கும் செல்கிறார்.மோடியின் இந்த பயணத்தின் போது, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது வர்த்தகம் மற்றும் தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தலாம் என தெரிகிறது.இந்தியாவுடன் இரண்டாவதாக மிகப் பெரிய அளவில் வர்த்தக உறவு வைத்துள்ள ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று. எனவே இந்த பயணத்தின் போது இரு நாடுகளின் பொருளாதார பலத்தையும் மேம்படுத்தும் திட்டத்தில் மோடியும், சார்லசும் கவனம் செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.