சங்கர் கொலை வழக்கு மகளை கைவிட மறுத்ததால் கொல்ல உத்தரவிட்டேன்: தந்தை வாக்குமூலம்
3/23/2016 2:12:53 PM
கோவை : ரூ.10 லட்சம் தருவதாக கூறியும் மகளை கைவிட மறுத்ததால் உடுமலை தலித் வாலிபரை வெட்டிக்கொல்ல உத்தரவிட்டேன் என கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் இன்ஜினீயரிங் மாணவர் சங்கர் (21). தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த 13ம் தேதி உடுமலை பஸ் நிலையம் அருகே நடுரோட்டில் பட்டப்பகலில், வெட்டிக் கொல்லப்பட்டார். இவரது மனைவி கவுசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இவர்தான், கூலிப்படையை அனுப்பி இக்கொடூரை கொலையை செய்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவரை உடுமலை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். உடுமலை போலீசாரிடம் சின்னசாமி அளித்துள்ள வாக்குமூலம் :
எனது மகள் கவுசல்யா சங்கரை திருமணம் செய்துகொண்டது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. உறவினர்களை அனுப்பி, சங்கரிடம் பேசினோம். ரூ.10 லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன், எனது மகளை என்னிடம் அனுப்பிவிடு என சங்கரிடம் கூறினேன். ஆனால் அவரோ, நான் கவுசல்யாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் எனக்கூறி மறுத்து விட்டார். கணவனை பிரிந்து எங்களுடன் வந்துவிடும்படி எனது மகளிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால், அவள், வாழ்ந்தால் சங்கரோடுதான் வாழ்வேன் என விடாப்பிடியாக கூறிவிட்டாள்.இது, எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பெற்ற மகளே இப்படி மாறிவிட்டாளே என வேதனையாகவும் இருந்தது.
எனது மகளின் செயலால் உறவினர்கள் என்னை கேவலமாக பேசினர். என்னால், கோயில் விழா, சந்தை, கடை என எங்கும் செல்ல முடியவில்லை. ஊர் முழுவதும் பல மாதிரியாக பேச துவங்கினர். இது, எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. மீண்டும் எனது மகளிடம் பேசினேன். என்னிடம் வந்துவிடு.. இல்லையேல், உன்னையும், உனது கணவனையும் தீர்த்துக்கட்டி விடுவேன் என மிரட்டிப்பார்த்தேன். ஆனால், கவுசல்யா பயப்படவில்லை. என்னுடன் வர மறுத்துவிட்டார்.இனி, சரிப்பட்டு வராது என முடிவு செய்தேன். நாளுக்கு நாள் எனது ஆத்திரம் அதிகரித்தது. எனவே, சங்கரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். சங்கர் கதையை முடித்துவிட்டு, கவுசல்யாவை காரில் அழைத்து வாருங்கள் என எனது ஆட்களுக்கு உத்தரவிட்டேன். கவுசல்யா வர மறுத்தால் அவளையும் தீர்த்து கட்டிவிடுங்கள் என ஆணையிட்டேன்.
எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெகதீஸ் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து சங்கரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். தன்ராஜ் என்பவரை உடுமலைக்கு அனுப்பி, சங்கரின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்தார். தக்க தருணம் வரும்வரை காத்திருந்தனர். சரியாக திட்டமிட்டு சங்கரை கொலை செய்தனர். கவுசல்யா வர மறுத்ததால் ஆத்திரத்தில் அவளையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இவ்வாறு சின்னசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சின்னசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 7 நாள் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதால் இன்னும் 5 நாள் கழித்து சின்னசாமியை மீண்டும் உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.தாய் மாமன் கைதுசங்கர் கொலை வழக்கில் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், மதன், மற்றொரு மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சின்னசாமி, பிரசன்னா சரண் அடைந்தனர். கவுசல்யாவின் தாய்மாமா பாண்டித்துரை(49) என்பவர் நிலக்கோட்டையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று நிலக்கோட்டை சென்று அவரை கைது செய்தனர். நேற்று மாலை உடுமலைக்கு அழைத்து வரப்பட்ட பாண்டித்துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் தன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சிக்கியுள்ளனர்.