மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை
3/22/2016 2:26:04 PM
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் 35 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளான டேவிட் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நாளை குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 11 தீவிரவாதிகள் கடல்வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி என்பவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதில் ஹெட்லி முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது.
ஹெட்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க சிறையில் இருந்தபடி மும்பை கோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங்கில் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார். மும்பை தாக்குதலுக்கு முன்பு இந்தியா வந்ததையும், மும்பையில் நிறுவனம் ஒன்றை தொடங்கி பல இடங்களை வேவு பார்த்ததையும் ஒப்புக் கொண்டார். லஷ்கர் இ தொய்ா, ஜெய்ஷ் இ முகமது, ஹஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவும் பணமும் அளித்து வருவதாக கூறினார்.
இது தவிர குஜராத்தில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட மும்பை மாணவி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தற்கொலை படைதீவிரவாதி என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார். இந்நிலையில் எதிர் தரப்பில் ஹெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி நேற்று விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் ஹெட்லியின் வக்கீலுக்கு வேறு வேலை இருந்ததால் நேற்று குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை. நாளை ஹெட்லியிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்தரப்பு வக்கீல் அப்துல் வகாப் கான் தெரிவித்துள்ளார். ஹெட்லியிடம் 4 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.