கண்ணீர் விட்ட மோர்டசா வீதியில் இறங்கி வங்கதேச ரசிகர்கள் போராட்டம் தஷ்கின், சன்னி தடை விவகாரத்தில் கொந்தளிப்பு
3/22/2016 2:21:09 PM
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி சமீப காலமாக எழுச்சி கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் தஷ்கின் அகமது, அரபாத் சன்னி ஆகியோர், விதி முறை மீறி பந்து வீசுவதாக கூறி, இருவருக்கும் ஐசிசி தடை விதித்தது. இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஐசிசியிடம் அப்பீல் செய்துள்ளது. இதனிடைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தஷ்கின் அகமதை பற்றி பேசிய, வங்கதேச கேப்டன் மோர்டசா கண் கலங்கினார். அவர் கூறுகையில், என்னுடைய கேரியரை பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால் ஒரு கேப்டனாக தஷ்கினுக்கு பின்னால் நான் நிற்க வேண்டும்.
அவர் எங்கள் நாட்டிற்கு 10-15 வருடங்கள் சேவையாற்ற வேண்டும் என்றார். இதனிடையே இருவருக்கும் தடை விதிக்கப்பட்ட விவகாரம், வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டாக்காவில் ரசிகர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது ஐசிசியின் செயல் வெட்கக்கேடானது. இந்த நடவடிக்கை முறைகேடானது என குற்றம் சாட்டினர். 23 வயதான சஜிபான் சுதீப் என்ற ரசிகர் கூறுகையில், விதிமுறை மீறி பந்து வீசுவதாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்படுவதில்லை. வங்கதேசம் போன்ற அணிகளின் பந்து வீச்சாளர்களுக்குதான் தடை விதிக்கப்படுகிறது. இது புதிதல்ல என்றார்.