உத்திரமேரூர் அருகே சூரசம்ஹாரம்
3/22/2016 2:10:45 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கடம்பர நாதர் கோயில் கிராமம் உள்ளது. இங்கு கடம்பரநாதர் சுவாமி வீற்றிருக்கிறார். இக்கோயிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவில் சுவாமி வீதியுலா நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சுவாமி வீதியுலா நேற்றிரவு நடந்தது. இதற்காக இளையனார் வேலூர் கிராமத்தில் இருந்து முருக பெருமான் கடம்பர கோயிலுக்கு எடுத்து வரப்பட்டார். பின்னர், அங்கிருந்து முருக பெருமான், கடம்பரநாதர், ஆவுடையம்மன் ஆகிய சுவாமிகளுடன் மலர் அலங்காரத்தில் வீதியுலா புறப்பட்டார்.
முக்கிய வீதிகள் வழியாக இன்று அதிகாலை செய்யாறு ஆற்றங்கரையை சுவாமிகள் வந்தடைந்தது. அங்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதை 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் புத்தலி ராஜசேகரன், செயல் அலுவலர் கேசவராஜன் ஆகியோர் செய்திருந்தனர். மாகரல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.