விழிப்புணர்வு படத்தில் மாம்பழ சின்னம் பாமகவுக்கு இலவச விளம்பரம்?
3/19/2016 12:36:02 PM
பெரம்பலூர்: தமிழக சட்டமன்றப் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.புதிய வாக்காளர்களைக் கவர்வதற்காக நடிகர்கள் கமல், சூர்யா, சசிகுமார், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரைக் கொண்டு விழிப்புணர்வு குறுமட்படங்களைத் தயாரித்து அவற்றை கல்லூரிகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் ஒளிபரப்பி வருகின்றனர். தேர்தல் ஆணைய இணையதளத்தில், அனிமேஷன் முறையிலும் விழிப்புணர்வுகாட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.‘அப்பீல் டு யங் எலக்ட்ர்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அனிமேஷன் படத்தில், மாந்தோப்பில் விளையாடும் சிறுவர், சிறுமியர் மரத்தில் ஏறிக்கொண்டும், மாம்பழத்தைப் பறித்துக்கொண்டும், இப்போது சாப்பிடும் நேரம், நாமெல்லாம் மாம்பழம் சாப்பிடலாமா எனக்கேட்டபடி, கைகளில் மாம்பழங்களை கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு பேசுவது போலவும், மாந்தோப்பில் மாம்பழங்கள் காய்த்துக் குலுங்குவது போலவும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.பாமக கட்சியின் சின்னமான மாம்பழத்தை விழிப்புணர்வு படத்தில் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.