பட்டியலையே அறிவிக்கவில்லை பந்தலை போட்டார் முக்கோண அமைச்சர் உதயா.. இது சரியா...?
3/19/2016 12:35:19 PM
சாத்தூர்: தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி மீது அதிருப்தி அலை வீசுவதால் சிட்டிங் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைப்பது அரிதினும் அரிது என்ற சூழ்நிலை அதிமுகவில் நிலவுகிறது. இந்நிலையில், ‘முக்கோண அமைச்சர்’ பந்தலை போட்டு தேர்தல் பணியே ஜரூராக தொடங்கி விட்டார். உதயா.. இது சரியா... என அதிமுகவினர் அங்கலாய்க்கின்றனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி எம்எல்ஏ உதயகுமார். வருவாய் அமைச்சராகவும் உள்ளார். சீட்டுக்கு பணம் பெற்ற விவகாரம், அமைச்சர்களின் முறைகேடான சொத்துக்குவிப்பு குறித்து ரகசிய விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது தொகுதியில் பந்தலை போட்டு தேர்தல் பணியை உதயகுமார் தொடங்கி இருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து, மதுரையில் தொழில் நடத்தியவர் உதயகுமார். தனக்கு சம்பந்தமே இல்லாத விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். இதனால் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் பலர் இவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். ‘முக்கோண அமைச்சர்’ என்று கிண்டலாகவும் பேசத்தொடங்கினர்.உதயகுமார் சாத்தூர், கே.கே.நகரில் உள்ள தனது வீட்டருகே ஒரு காலிமனையை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா படத்துடன் பிரமாண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் அலுவலகம் போலவும் இதை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இதை கவனித்த அதிருப்தி அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்களோ, ‘சொந்த இடத்தில் அலுவலகம் அமைப்பதில் தவறில்லை’ என கூறி உள்ளனர். பட்டியலே அறிவிக்காத நிலையில் பந்தல் போட்ட விவகாரம் குறித்து தலைமைக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர்.