ராஜபாளையத்தில் ‘110’ அதிமுக எம்எல்ஏ உர்ர்ர்
3/19/2016 12:34:57 PM
ராஜபாளையம்: சட்டசபையில் நடக்கவே வாய்ப்பில்லாத திட்டங்களை எல்லாம் 110 விதியின் கீழ் அறிவிப்பது முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். ஆனால், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட 110 பேர் விண்ணப்பித்து அதிர்ச்சி அளிக்கின்றனர். இத்தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான கோபால்சாமி கடந்த முறை ‘சின்னம்மாவிடம்’ சில பெட்டிகளை தந்து சீட் பெற்றதாக அதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இதனால் தனக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என ஆசையாக இருந்தார். அதிமுக அரசில் ஜாக்பாட்டாக விருதுநகர் மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் கிடைத்தனர்.அருப்புக்கோட்டை எம்எல்ஏ வைகைசெல்வனின் அமைச்சர் பதவி பறிபோனதும், ‘நான்தான் அடுத்த அமைச்சர்’ என்று மார்தட்டி வந்தார் கோபால்சாமி. இதனால் அமைச்சர்களையும் மதிக்காமல் சுற்றி வந்தார்.
முன்னதாக ராஜபாளையம் தொகுதியில் 1991ல் சாத்தையா, 2001ல் ராஜசேகர், 2006ல் சந்திரா அதிமுக சார்பில் போட்டியிட்டனர். இதில் யாருக்கும் மீண்டும் சீட் தரப்படவில்லை. இந்த சென்டிமென்ட் கோபால்சாமி விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.காரணம் இத்தொகுதியில் இவர் மீண்டும் வருவதை விரும்பாத அதிமுகவினர் அதிகளவு போட்டியிட விருப்ப மனு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 110 விருப்ப மனுக்கள் தந்துள்ளனராம். இதனால் கோபால்சாமி உர்ரென்று இருக்கிறாராம். பார்ப்பவர்களிடம் எல்லாம் கர்புர் என்று கத்துகிறாராம்.