உட்கட்சி மோதல் வெடிக்கிறது அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும் வைகோ பேட்டி
3/18/2016 3:01:22 PM
கோவை: உட்கட்சி மோதல் வெடிக்கிறது, அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும் என வைகோ கூறினார்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அப்ேபாது அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பகல் கொள்ளை நடந்துள்ளது. இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் ஊழல் நடந்ததில்லை என மத்திய பொருளாதார ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் மதுவால் பெண்கள் சமுதாயத்தை அதிமுக அழிக்கிறது. அதிமுகவுக்குள் பெரும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணம் முறையாக வந்து சேரவில்லையா? அல்லது சிலர் அமுக்கி விட்டார்களா? என தெரியவில்லை.
கொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல் நடந்துவருகிறது. ஐவர் அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கேரளாவில் பிடிபட்ட கோடிக்கணக்கான ஹவாலா பணம்கூட போயஸ் கார்டனுக்குத்தான் சென்றுள்ளது. 2 அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்துவருகிறது. அதிமுகவுக்குள் நடப்பது உட்கட்சி பிரச்னை என மவுனமாக இருக்க முடியாது. மக்கள் பணம், அந்த கூடாரத்தில் உள்ளது. அதை மீட்க வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என மிக விரைவில் உச்சநீதிமன்றத்தில் உறுதிசெய்யப்படும்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாவட்ட வாரியாக அதிமுக ஏற்கனவே பணம் பட்டுவாடா செய்துவிட்டது. இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கவிடாமல் தேர்தல் ஆணையம் தடுக்கவேண்டும். அதிமுகவின் பணம் பட்டுவாடாவை, இளைஞர் சமுதாய ஓட்டு முறியடிக்கும்.மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து வரும் 20ம்தேதி சென்னையில் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளோம். மிக சுலபமாக தொகுதி பங்கீடு செய்வோம். இரண்டு அல்லது நான்கு நாளில் தொகுதி பங்கீடு முடிவடையும். தேர்தல் ஆணையம் ரொம்பவே கெடுபிடி செய்கிறது. தேர்தல் ஆணையம் தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில், சாதிய வெறி படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.