வங்கிகளில் 1 லட்சத்துக்கும் மேல் பணபரிவர்த்தனை கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
3/18/2016 3:00:26 PM
சென்னை: தேர்தல் விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில், தேசிய மையமாக்கப்பட்ட 45 வங்கிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வங்கியில் வேட்பாளர் கணக்கில் 1 லட்சத்துக்கு மேல் பணபரிவர்த்தனையை கண்காணிக்க வேண்டும். 10 லட்சத்துக்கும் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் அதிகாரிகளுக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடன் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் உறவினர்களின் வங்கி கணக்கை கண்காணிக்க வேண்டும். ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். ஒரு வங்கி கணக்கில் இருந்து 25 தடவைக்கு மேல் பணபரிவர்த்தனை நடத்தால் கண்காணிக்கபட வேண்டும். மேலும், செயல்படாத வங்கி கணக்கில் இருந்து திடீரென 2 மாதங்களில் பணபரிவர்த்தனை நடைபெற்றால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு பிரசார ஊர்தியை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் 16 தொகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.