செம்பரம்பாக்கம் அருகே நடந்த ஏரி மணல் கொள்ளை வழக்கில் அமைச்சர் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பு விசாரணை
3/18/2016 2:58:26 PM
சென்னை: ஏரி மணல் கொள்ளை வழக்கில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. சென்னையை சேர்ந்த துரை ஆனந்த், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:செம்பரம்பாக்கம் அருகே நேமம் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆழப்படுத்த அதிகமாக சவ்வூடு மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏரியை 251 அடி கொள்ளளவாக அதிகரிக்க மணல் எடுக்கும்படி அரசு அனுமதி வழங்கியது. 10 ஆயிரம் லோடு மணல் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு சட்ட விரோதமாக 1 லட்சம் லோடு மணல் அள்ளியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதனால் அந்த ஏரி பலவீனம் அடைந்ததுடன், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஏரி உடைந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தண்ணீர் புகுந்தது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு மூலம் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்த மணல் கொள்ளை தான் காரணம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.சுரேஷ்சாமி, ‘மணல் கொள்ளை நடந்துள்ளது. கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும்’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே ஒரு வழக்கை விசாரித்து வருகிறோம். ஏப்ரல் மாதம் 17ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்குடன் சேர்த்து உங்கள் வழக்கையும் விசாரிக்கிறோம் என்றனர்.