ஆண்டுக்கணக்கில் மக்கி வரும் அரசு வாகனங்கள் அதிகாரிகளின் அலட்சியம்: வீணாகும் மக்கள் வரிப் பணம்
3/17/2016 3:10:32 PM
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், கல்வி, பொதுப்பணி துறை, போலீஸ், வருவாய், சுகாதாரத் துறை, வனத்துறை, மருத்துவத் துறை, பத்திரப்பதிவு துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பல்வேறு அரசு துறை அலுவலக உயர் அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வருகிறது.இதனால், ஏற்கெனவே அரசு அதிகாரிகளின் பயன்பாட்டில் இருக்கும் கார், ஜீப், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அந்தந்த துறை அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் ஆண்டுக்கணக்கில் மண்ணோடு மண்ணாக மக்கி வருகின்றன.
குறிப்பாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கார், வேன் மற்றும் ஜீப்கள் பழுதடைந்து துருப்பிடித்து, ஆண்டுக்கணக்கில் அனாதையாக நிற்கின்றன. இந்த வாகனங்களை சுற்றிலும் ஏராளமான புதர்கள் வளர்ந்துள்ளன. எவ்வித பாதுகாப்பும் அற்ற சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த அரசு வாகனங்களில் மதுபானம் அருந்துதல், விபசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன.
இதேபோல், நுங்கம்பாக்கத்தில் ஆரம்ப, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி அலுவலகங்களின் தலைமையகமான டிபிஐ வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜீப்புகள், 20-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டெம்போ டிராவலர் வேன்கள் மண்ணோடு மண்ணாக மக்கி வருகின்றன.
இதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலக வளாகம் மற்றும் போலீஸ் குடியிருப்புகள், டிஜிபி அலுவலக வளாகம், ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதை ஒட்டியுள்ள புதுப்பேட்டை சாலையில் ஏராளமான காவல்துறை வாகனங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் அதிகளவு பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட பெரிதும் அஞ்சி வருகின்றனர்.இதுபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஏராளமான அரசு வாகனங்கள் மக்கி வருகின்றன.
இதுகுறித்து அரசு துறையில் டிரைவர்களாகப் பணியாற்றி வரும் ஒருசிலரிடம் பேச்சு கொடுத்தோம்.‘நாங்கள் அனைவரும் பல்வேறு அரசு துறையில் 35 வருடங்களாக டிரைவராக பணியாற்றி வருகிறோம். பொதுவாக, அரசு துறைக்கு ஒரு வாகனம் வாங்கப்படும்போது, அந்த வாகனம் ஒழுங்காக பராமரிக்கப்படும்போது அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பிரச்னையில்லாமல் ஓடும். இதனால், ஒவ்வொரு அரசு துறைக்கும் புதிய வாகனங்கள் வாங்கும்போது, ஒரு வருட காலம் அந்தந்த கம்பெனிகளின் சர்வீஸ் சென்டர்களில் முறையாக பராமரிக்கப்படுகிறது. அதன்பின் அந்த வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உருக்குலைந்து விரைவில் ஓரங்கட்டப்படுகிறது. மீண்டும் உயர் அதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்கப்படுகின்றன.
இந்த அரசு அலுவலகங்களில் இரவுநேர பாதுகாப்பு குறைபாடு காரணமாக, இங்கு ஆண்டுக்கணக்கில் நிற்கும் வாகனங்களின் பேட்டரி, டயர் உள்ளிட்ட அனைத்து இயந்திர பாகங்களும் பல்வேறு சமூகவிரோதிகளால் கழற்றி விற்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதனால் அந்த வாகனங்கள் தற்போது வெறும் எலும்புக்கூடுகளாகவே காட்சியளிக்கின்றன.இதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட டேபிள், நாற்காலி, கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட பல பொருட்களும் ரிப்பன் மாளிகையில் பெரும்பாலான அறைகளை அடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் தமிழக மக்களின் லட்சக்கணக்கான வரிப்பணம்தான் வீணாக மண்ணில் மக்கி வருகிறது. இதை விடுத்து, இந்த வாகனங்களை முறையாக ஏலத்தில் விட்டால், அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?’ என்று அனைத்து டிரைவர்களும் ஏக்கப் பெருமூச்சுடன் கூறுகின்றனர்.இந்த அவலநிலை அரசு அலுவலகங்களில் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களும் நிறுத்த இடமின்றி, முக்கிய சாலைகளில் குப்பைகளாக குவிந்து காணப்படுகின்றன.
உதாரணமாக, சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தை ஒட்டிய மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பைக் மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் குப்பை மலையாக குவிந்துள்ளது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலைகளை ஒட்டியுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பறிமுதல் வாகனங்கள் சாலையை அடைத்து கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இவற்றை தவிர்ப்பதற்கு, காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக துருப்பிடித்த நிலையில் இருக்கும் வாகனங்களை நீதிமன்றத்தில் ஆணை பெற்று, ஆண்டுதோறும் காவல்துறையினர் ஏலத்தில் விட்டால், இடமும் சுத்தமாகும். அரசுக்கும் போதிய வருவாயும் கிடைக்கும்.இதை சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?