கோவை அரசு மருத்துவமனைக்கு போனில் வெடி குண்டு மிரட்டல் போலீசார் விசாரணை
3/15/2016 3:25:26 PM
சென்னை: கோவை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை கோஷா மருத்துவமனைக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷா மருத்துவமனை 108 இலவச ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகம் திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10.30 மணி அளவில் இந்த மருத்துவமனைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. போனில் பேசிய அந்த நபர் “ கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து பாருங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து கோவை மாவட்ட போலீசாருக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து, போனில் பேசிய அந்த மர்ம ஆசாமி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.