துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் கண்டுகொள்ளாத தாம்பரம் நகராட்சி
3/15/2016 3:23:32 PM
தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. தினமும் 100 டன் குப்பைகள் சேருகிறது. இதில் 11வது வார்டு முதல் 27வது வார்டு வரையிலும் மற்றும் 10, 32, 35 ஆகிய வார்டுகளிலும் ஸ்ரீனிவாச வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனம், துப்புரவு பணியில் சுமார் 300 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. இவர்களுக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய சம்பளம் சரிவர கொடுப்பதில்லை. பலமுறை கேட்டும், சம்பளம் கொடுப்பதில் நிறுவனம் தாமதம் செய்து வருகிறது. அதோடு மட்டுமின்றி ஊழியர்களை திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களிலும் நிறுவனத்தார் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது, ‘இனிமேல் காலதாமதம் நடக்காது’ என்று நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அந்த நிறுவனம் கடைபிடிக்கவில்லை.இதனிடையே நகராட்சி சார்பில் 14 முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஒரு தொகையை கொடுத்து அந்த நிறுவனம், அதிகாரிகளை சரி கட்டியே வந்துள்ளது என புகார் கூறப்படுகிறது. சம்பளம் விரைந்து வழங்க உயரதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.