துபாயில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க 10 கிராமங்கள் முடிவு
3/15/2016 3:19:44 PM
சென்னை: தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்கள் துபாயில் மீன்பிடி தொழில் ஈடுபடுவதற்காக கடந்த 2013ம் ஆண்டு சென்றனர். கடலில் மீன் பிடிக்கும் போது அரேபியா மீனவர் கமிஸ் என்பவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பாக, தமிழக மீனவர்கள் 23 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இவர்கள் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால், எவ்வித வேலையும் இன்றியும், இருப்பிடம், உணவின்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே, 23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி 4 முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தவித்து வரும் மீனவர்களால், தமிழகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல், உணவின்றியும் அவதிப்படுகின்றனர். நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்ப சேர்ந்தவர்கள் தனித்தனியாக மனு அளிக்க உள்ளனர். மனுவை வாங்க மறுத்தால், அங்கேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு 23 மீனவர்களை மீட்க வேண்டும், இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.