நாடு முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை மத்திய அமைச்சர் அறிவிப்பு
3/15/2016 3:15:55 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் தெரிவித்தார். மாற்று திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மாநில அரசு வழங்கும் அடையாள அட்டைகள் சில சமயங்களில் மத்திய அரசின் நலத்திட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ேவறுமாநிலங்களுக்கு சென்றாலும் பிரச்னை ஏற்படுகிறது. இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் செல்லுபடியாக கூடிய வகையில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும் என மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த அடையாள அட்டை நாடு முழுவதும் செல்லுபடியாகும் எனவும் இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதில் மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்கள் மற்றும் மாநில அரசின் ஆவணங்களிலிருந்து மாற்று திறனாளிகள் தொடர்பான தகவல் பெறப்பட்டு மத்திய தொகுப்பு ஒன்றை உருவாக்கும் பணியை தேசிய தகவல் மையம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.