சூப்பர் 10 சுற்று ஆரம்பம்: வெற்றியுடன் துவங்குமா இந்தியா ? நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
3/15/2016 3:12:43 PM
நாக்பூர்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் பிரதான சூப்பர் 10 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நாக்பூரில் இன்று நடக்கும் சூப்பர் 10 முதல் போட்டியில், குரூப்-2ல் இடம்பெற்றுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலக கோப்பை தொடரை நடத்திய நாடு, இதுவரை கோப்பையை வென்றதில்லை.
சூப்பர் பார்மில் உள்ள இந்தியா, இம்முறை அதனை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016ல் இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10ல் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடைசி 7 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது. அதே சமயம் நியூசிலாந்தும் கடைசியாக பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக விளையாடிய 5 டி20 போட்டிகளில் 4ல் வெற்றி கண்டுள்ளது. ஆனால் நியூசிலாந்து தனது சொந்த மண்ணிலேயே வெற்றி பெற்றது. மறுபக்கம் ஆஸ்திரேலியா, வங்கதேச மண்ணில் இந்தியா வெற்றியை நிலை நாட்டியுள்ளது.
ஆனால் டி20 போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்தை வென்றதில்லை. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 4ல் நியூசிலாந்து வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சோகமான வரலாற்றை மாற்றி காட்ட வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் சொந்த மண், நல்ல பார்ம் உள்ளிட்ட காரணங்களால், நியூசிலாந்தின் பாய்ச்சல் இம்முறை எடுபடுமா? என்பது சந்தேகமே.
விராத் கோஹ்லி கடந்த 2 மாதங்களாக சூப்பர் பார்மில் உள்ளார். கடைசியாக விளையாடிய 7 இன்னிங்சுகளில், 4 இன்னிங்சுகளில் அரை சதம், 2 இன்னிங்சுகளில் 40க்கும் கூடுதலான ரன்களை எடுத்துள்ளார். 6வது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள ரோகித் சர்மாவும் அசத்தலாம். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அரை சதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 73 ரன் என தவானும் நல்ல பார்மிலேயே உள்ளார்.
இவர்களுடன் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, டோனி என இந்திய பேட்டிங் ஆர்டர், எதிரணியை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ராவும், நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களிடம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அஸ்வின், ஜடேஜா என வலுவான ஸ்பின்னர்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு இது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனுடன் சமீபத்திய கண்டுபிடிப்பான பாண்ட்யா ஆல் ரவுண்டராக அசத்தலாம்.
அதே சமயம் நியூசிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் கேன் வில்லியம்சன், மார்டின் குப்தில், காலின் முன்றோ, கிரேன்ட் எலியட், ரோஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன் என அதிரடி காட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடது-வலது வேகப்பந்து வீச்சு கூட்டணியும், நல்ல ஸ்பின்னர்களும் உள்ளதால், இந்தியாவுக்கு நியூசிலாந்து சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை வெற்றியுடன் துவக்க இரு அணிகளும் போராடும் என்பதால், விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
சிறப்பு செய்த கூகுள் முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கும் போது, கூகுள் நிறுவனம், தனது ஹோம்பேஜ்-ல் டூடூல்கள் மூலம் அலங்கரித்து வருகிறது. இதன்படி இன்று நடக்கும் இந்தியா-நியூசிலாந்து போட்டியை சிறப்பிக்கும் வகையிலும், கூகுள் நிறுவனம், தனது டூடூலை மாற்றியுள்ளது. இதில், இரு அணிகளின் சீருடை நிறத்துடன் கூடிய 2 பேட்களும், அதன் மீது ஒரு பந்து இருப்பது போன்ற படத்தையும் வைத்துள்ளது.