கள்ள துப்பாக்கி வைத்திருந்த மாஜி பாமக நிர்வாகி கைது
3/15/2016 2:58:10 PM
சீர்காழி: கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த மாஜி பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே இளைய மதுக்கூடத்தை சேர்ந்தவர் அகோரம்(48). பாமக மாநில துணை பொதுச்செயலாளராக இருந்தார். கடந்த 2014 நவம்பரில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் மூர்த்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அகோரம் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். 6 மாதத்துக்கு பின் ஜாமீனில் வந்தார்.நேற்று சம்பா கட்டளையில் உள்ள தனது மாமனார் வீட்டின் தோட்டத்தில் கட்ட பஞ்சாயத்தில் அகோரம் ஈடுபட்டுள்ளதாக நாகை எஸ்பி கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருவெண்காடு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.அகோரத்திடம் உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரையும் அவரது ஆதரவாளர்கள் சம்பாக்கட்டளையை சேர்ந்த செழியன் (40), முத்து (24), எம்பாவை சேர்ந்த பாபு (25), கண்ணதாசன் (26), பிரபாகர் (20), மங்கைமடத்தை சேர்ந்த சுந்தர் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கள்ள துப்பாக்கி, 3 பைக்குகள், 2 அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளை பறிமுதல் செய்தனர்.