காதல் விவகாரத்தில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம் : 4 பேர் அதிரடி கைது
3/15/2016 2:56:32 PM
உடுமலை: காதல் விவகாரத்தில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் சங்கரின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர்(22). இவரது மனைவி கவுசல்யா. வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்தனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் உடுமலையில் புது துணி வாங்கி திரும்பியபோது, நடுரோட்டில் சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கவுசல்யா படுகாயம் அடைந்தார். கவுசல்யாவின் குடும்பத்தினர் கூலிப்படை அமைத்து இந்த கவுரவ கொலையை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் சங்கரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான குமரலிங்கம் கொண்டு செல்லப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் மயானத்திற்கு உடலை கொண்டு சென்றனர். அப்போது அங்கு குவிந்த சங்கரின் உறவினர்கள், ‘’ சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர் தான் மயானத்திற்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.இதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள், மயானத்தில் இருந்த விளக்குகளை உடைத்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் சடலத்தை வீட்டுக்கு கொண்டு சென்றனர். திடீரென பழனி ரோட்டில் 100 பெண்கள் உள்பட 300 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
‘சங்கர் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிட வேண்டும், வீடியோ ஆதாரத்தை காட்ட வேண்டும்’ என்று கோஷம் போட்டனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதன்பிறகு சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்றால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதிய போலீசார், மயானத்திற்கே உடலை கொண்டு சென்றனர். உறவினர்கள் முன்னிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அடக்கம் செய்தனர்.சின்னசாமியை காவலில் எடுக்க முடிவுகொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நேற்று நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் விசாரித்தால்தான் கூலிப்படை பற்றிய விவரம் தெரிய வரும். எனவே, சின்னச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோர்ட்டில் மனு செய்ய உடுமலை போலீசார் முடிவு செய்துள்ளனர்.4 பேர் சிக்கினர்சங்கர் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பழநியை சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் மூவரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.