வேட்டியை உருவலாம்... கோவணத்தை உருவலாமா? பழ.கருப்பையா கிண்டல்
3/15/2016 2:55:28 PM
மதுரை: அதிமுகவில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. காசு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என கூறியதால் அக்கட்சியில் இருந்து பழ.கருப்பையா அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து அவரது வீடு, கார் தாக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு சென்று அதிமுக அரசின் ஊழல் குறித்து பேசி வருகிறார். இதற்காக பல ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சொந்த காரில் வலம் வந்தால் அதிமுகவினர் வழிமறித்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் இவருக்கு கிடைத்துள்ளது.
இதனால் சொந்தகாரை தவிர்த்து வாடகை காரில் வலம் வர துவங்கிவிட்டார். அதுவும் ஒரே காரில் அல்ல... மாறி மாறி கால்டாக்சியை புக் செய்து சவாரி செய்கிறார்.இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘என்னங்க செய்யச்சொல்றீங்க. அதிமுக ஆட்சி மோசமாக உள்ளது. ரோட்டில் நடந்து போகிறவர்களிடம் இருந்து பட்டு வேட்டியை கழற்றினால் கூட பரவாயில்லை. அவனே கோவணம் கட்டிச்செல்கிறான். அந்த கோவணத்தையும் கழற்றி தெருவில் விட்டுறாங்க. இதை சொன்னால் தாக்குதல் நடத்துறாங்க. அதான் வாடகை காரில் வலம் வந்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.