ஆசாரிபள்ளத்தில் விநியோகம் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் மருந்து குடோனில் பதுக்கல் கலெக்டர் ஆபீசுக்கு புகார் சென்றதால் திரும்பி சென்ற ஜீப்கள்
3/15/2016 2:53:53 PM
நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மருந்து கிட்டங்கியில் இருந்து அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எடுத்த செல்ல இருந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் சென்ற தால் திட்டம் கைவிடப்பட்டது.தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் விதிமுறைகளை மீறி இவற்றை அதிகாரிகள் ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாய் செலவில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில் குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் ஆகிய 16 வகையான பொருட்கள் உள்ளடக்கி உள்ளன.
இப்பெட்டகத்தின் மதிப்பு 1000 ரூபாய் ஆகும். இந்த பரிசு பெட்டகம் குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மருந்து கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவற்றை உடனே குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ரகசியமாக வழங்கிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் இந்த பரிசு பொட்டலங்களை பெற்றுச்செல்வதற்காக அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்ந்த 10 ஜீப்புகள் உள்ளிட்ட வாகனங்கள் ஆசாரிபள்ளம் மருந்து கிட்டங்கிக்கு வந்தன.
அவற்றில் குழந்தைகள் நல பெட்டக பரிசு பொருட்களை ஏற்றும் பணிகள் ஜரூராக நடந்தது. பச்சை வண்ணத்தில் பார்சல் வெளியே தெரிந்தால் ஆபத்து என்று கருதி அவற்றை பெரிய அட்டைப்பெட்டிகளில் மறைத்து அவற்றை ஜீப்பு களில் ஏற்றினர். அவற்றுடன் மருந்துகள் அடங்கிய பெட்டிகளையும் சேர்த்து ஏற்றிக்கொண்டிருந்தனர். இது தொடர்பான தகவல் வெளியான நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக பறக்கும்படை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க நேற்று மாலையில் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும்படை அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென்று வாகனங்களில் ஏற்றப்பட்ட அட்டை பெட்டிகள் மீண்டும் மருந்து குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமீறலை சுட்டிக்காட்டிய நிலையில் அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யாமல் ரகசியமாக மீண்டும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மருத்துவ துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.